தருமபுரி, 12 செப்டம்பர் 2025 (ஆவணி 27) -
தருமபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் என்.கே. திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக துறை சார்ந்த அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
மேலும் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் (BP), நீரிழிவு (சர்க்கரை நோய்) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் காவேரி, துணைச் செயலாளர் சதீஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.